கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தோல்வி பயத்தால் 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்!
காங்கிரஸ் வேட்பாளராக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, மேலும் ஒரு தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாமுண்டீஸ்வரி தொகுதியில், அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று வெளியிடப்பட்ட 2வது வேட்பாளர் பட்டியலில், பதாமி தொகுதியிலும் போட்டியிடுவார், என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 12ந்தேதி நடைபெற உள்ள, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், சித்தராமைய்யாவின் மகனும் போட்டியிடுகிறார். எனவே, ஒரே குடும்பத்திற்கு 3 தொகுதிகளை ஒதுக்குவதா என கர்நாடக காங்கிரசில் சித்தராமைய்யாவிற்கு எதிரான அதிருப்தி கோஷ்டியினர் போர்க்கொடி தூக்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சித்தராமைய்யா 2 தொகுதிகளில் போட்டியிடக்கூடாது , என ஏற்கனவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி பதாமி தொகுதியை, சித்தராமைய்யாவிற்கு காங்கிரஸ் தலைமை ஒதுக்கியுள்ளது.
இதற்கிடையே அவர் தோல்வி பயத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக, பாஜகவினர் விமர்சித்துள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி 2 தொகுதிகளில் போட்டியிடவில்லையா, என சித்தராமைய்யா ஆதரவாளர்கள், பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.