புதுச்சேரி 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறும் – கவர்னர் தமிழிசை!
புதுச்சேரி 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறும் என கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல புதுச்சேரியிலும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், கொரோனா தொற்றை ஒழிக்கும் விதமாகவும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்டார்கோயிலிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி திருவிழா இன்று நடைபெற்றுள்ளது.
இந்த திருவிழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், திருபுவனை எம்எல்ஏ அங்காளன், சுகாதாரத்துறை செயலாளர் அருண், மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த பின்பதாக செய்தியாளரை சந்தித்து பேசிய கவர்னர் தமிழிசை, புதுச்சேரியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்திருப்பதாகவும், தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்வதில் சுகாதாரத்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி திருவிழாவில் நேற்று மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் 100% தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறிவிடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே தீர்வு எனவும், இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி விளங்குகிறது என்ற பெருமையை நாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அனைவரும் உற்சாகம் குறையாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதன் பின்பதாக கவர்னர் தமிழிசை திருபுவனை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்ததுடன், அங்கு உள்ள வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.