தென்மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ!

Default Image

தென்மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை விரைந்து தீர்க்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு கடிதம்.

தேர்தல் பரப்புரை நேரத்தில் தென்மாவட்ட மக்கள் பலர் குடிநீர் பிரச்சனை குறித்து அதிகம் கூறியதால் அந்த பகுதி மக்களின் பிரச்னையை தான் அறிந்து கொண்டதாகவும், இவர்களின் குடிநீர் பிரச்னையை விரைந்து சரிசெய்ய வேண்டும் எனவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இவர் எழுதியுள்ள கடிதத்தில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிப் பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து கூடுதலாக குடிநீர் வழங்க வழிவகை செய்யும் ‘சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் பகுதி -1’ எனும் திட்டத்திற்கு, தமிழக அரசால் 30.01.2017இல் நிர்வாக உத்தரவு வழங்கப்பட்டு, 06.12.2017 முதல் வேலைகள் நடந்து வருகின்றன.

உலக வங்கி, தமிழ்நாடு நகர கட்டமைப்பு மேம்பாட்டு மையம் மற்றும் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூபாய் 543 கோடி நிதி உதவியுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஐந்து நகராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியைச் சேர்ந்த 1,14,045 குடியிருப்புகளில் வசிக்கும் 4,35,150 பேருக்குக் குடிநீர் வழங்குவதை இலக்காகக் கொண்ட இத்திட்டப் பணிகள் நிறைவுபெறும்போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைக்கப் பெறும் என்பது இத்திட்டத்தின் இலக்கு ஆகும். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை குறித்த தங்களின் குமுறல்களை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது வேட்பாளர்களிடம் காட்டியதை அறிய முடிந்தது.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இப்பகுதியில், திட்டப் பணிகளைக் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து விரைந்து முடிக்க, குடிநீர் வடிகால் வாரியத்திற்குத் தக்க உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் திருவேங்கடம் பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லபட்டி, கீழத் திருவேங்கடம், புதுப்பட்டி, ஆவுடையார்புரம் ஆகிய நான்கு கிராமங்களுக்கும் புதிய குடிநீர்க் குழாய்கள் அமைத்து, இத்திட்டத்தில் கிடைக்கப் பெறும் தண்ணீரை வழங்கிடவும் வேண்டுகிறேன்.

அதேபோல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக என் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். அம்மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ எழுதிய கடிதத்தை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார், தென்காசி மாவட்டப் பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் ஆகியோர் திருச்சியில் அமைச்சர் கே.என். நேருவை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth