இந்திய எல்லையில் இந்திய படை வீரர்களை கிண்டல் செய்த பாக்.பந்துவீச்சாளர்! சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்,இந்தியா பாகிஸ்தானின் அட்டாரி-வாஹா எல்லையில் இருநாட்டுக் கொடி இறக்கும் நிகழ்ச்சியின் போது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை அவமதிக்கும் வகையில், சைகைகள் செய்துள்ளதற்குச் சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முறைப்படி, பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்பு படையினரிடம் புகார் அளிக்கப்படும் என இந்திய எல்லைப்பாதுகாப்புபடை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அட்டாரி-வாஹா எல்லையில் ஒவ்வொரு நாளும் இரு நாட்டு தேசியக் கொடிகளை இறக்கும் கொடி நிகழ்ச்சியைப் பார்க்க இரு நாட்டு மக்களும் கூடுவார்கள். வீரர்களின் சிறப்பான அணிவகுப்பைக் காணவும், மக்கள் ஆர்வத்துடன் வருவார்கள்.
அந்த வகையில், நேற்று(சனிக்கிழமை) வழக்கம் போல் வாஹா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பாகிஸ்தானின் வாஹா எல்லையில் அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சிநடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது, பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி வேகமாக அணிவகுப்புக்குள் வந்தார்.
இந்தியாவின் எல்லைப்பகுதியைப் பார்த்து நின்ற ஹசன் அலி, இந்திய வீரர்களுக்குச் சவால் விடும் வகையில், சில சைகைகளை செய்து, தன்னுடைய தோள்புஜத்தை காட்டியும், தொடையைத் தட்டியும், வீரம் மிகுந்த வீரர்களாகக் காட்டிக்கொள்வதுபோல் சைகை செய்தார்.
இதை அங்கிருந்த பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டிக்காமல் அதை ரசித்தனர். மேலும், ஹசன் அலி அவ்வாறு செய்து முடித்தபின், அவரை காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். ஹசன் அலியின் வித்தியாசமான இந்த செயல்களைப் பார்த்து ரசித்த அந்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் கைதட்டி மகிழ்ந்தனர்.
ஆனால், மிகுந்த பதற்றம் நிறைந்த இருநாட்டின் எல்லைப்பகுதியில் ஒரு கிரிக்கெட் வீரர் மற்ற நாட்டினரைப் பார்த்து கேலி செய்யும் வகையில் நடந்து கொண்டதற்கு இந்தியாவில் உள்ள நெட்டிசன்கள் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி குறித்து முறைப்படி பாகிஸ்தான் ராணுவத்திடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி முகுல் கோயல் கூறுகையில், ‘ஹசன் அலியின் செயல்கள் இருநாட்டு அணிவகுப்பு மரியாதைக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முறைப்படி பாகிஸ்தான் ராணுவத்திடம் புகார் அளிப்போம். இருநாட்டு வீரர்களும் தீவிரமான அணிவகுப்பு நடக்கும் போது பார்வையாளர்கள் மேடையில் இருப்பவர் ஒருவரும் அணிவகுப்புக்குள் வர அனுமதியில்லை. அணிவகுப்பு முடிந்தபின் அவர்கள் எந்தவிதமான செயல்களையும் செய்ய அனுமதி உண்டு. ஆனால், அணிவகுப்பின் போது இதுபோன்ற செய்ய அனுமதி கிடையாது’ எனத்தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலியின் செயல்பாடுகள் குறித்த காணொளி, புகைப்படம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், டிவிட்டரிலும் பகிரப்பட்டுள்ளது. மேலும் ஹசன் அலியும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் என்னுடைய பெருமை மிகு பாகிஸ்தான் வாழ்க என்று தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.