பிரேசிலில் ஒரே நாளில் 85 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று..!
பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 85,149 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும், பிரேசில் மூன்றாமிடத்திலும் உள்ளது. ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உலகத்தில் பிரேசில் 2 ஆம் இடத்தில் உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டு அதிபர் ஜெயீர் போல்சனரோ மீது கடும் விமர்சனம் கூறப்பட்டு வருகிறது. ஏனென்றால், தற்போது வரை இவர் ஊரடங்கை அமல்படுத்துவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தற்போது பிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அதிதீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொற்று பாதிப்பு குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 85,149 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,72,96,118 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,216 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,84,235 ஆக உயர்ந்துள்ளது.