#Breaking:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…!
- பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து,காங்கிரஸ் கட்சியானது இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது.
அதாவது,கடந்த சில மாதங்களாக வேகமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது,5 மாநில தேர்தலின் போது மட்டும் அதன் விலை அதிகரிக்காமல் ஒரே விலையில் நீடித்து வந்தது.
ஆனால்,தற்போது மீண்டும் பல பகுதிகளில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.100 தாண்டி விற்பனையாகி வருகிறது.
இதற்கிடையில்,மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதான்,சர்வதேச அளவில் சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில்,பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து,இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மேலும்,காங்கிரஸ் கட்சியினர் இன்று நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பு,கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி,சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் முன்பு,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கலந்துக் கொள்ளவுள்ளார்.