தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் – திருநாவுக்கரசர் பேச்சு!

Default Image

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், ஆறுமுகநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், வக்கீல்கள் மகேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சற்குரு வரவேற்று பேசினார்.

தமிழகத்தில் 30 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளனர். காமராஜர் பிறந்த நாளுக்குள் மேலும் 20 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பா.ஜ.க. அரசைக் கண்டித்து, புதுடெல்லியில் வருகிற 29-ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் பேரணி, பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து 2 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. சட்டமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம். வருகிற நவம்பர் 18-ந்தேதிக்கு முன்னதாகவும் வரலாம். மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் யாதவ் போன்ற பல்வேறு தலைவர்களும் பா.ஜ.க. அரசை எதிர்க்கின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக நிச்சயம் வருவார்.

தமிழகத்தில் எத்தனையோ பேர் முதல்- அமைச்சராக முயற்சி செய்து வருகின்றனர். சினிமாவில் நடித்தால் முதல்- அமைச்சராகி விடலாம் என்று கருதுகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அது விரைவில் மூன்றாகவும் உடையலாம். தி.மு.க.வுக்கு பிறகு 2-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் திகழும். இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். மன ஒற்றுமையுடன் ஆட்சி செய்யவில்லை. பிரதமரின் வற்புறுத்தலினால் ஒன்றாக இருப்பது போன்று பாவனை செய்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை அதிகாரப்பூர்வமாக நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவிடும் வரையிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் தி.மு.க. கூட்டணி மனித சங்கிலியில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

கூட்டத்தில் நகர தலைவர் ராஜாமணி, காயல்பட்டினம் நகர பொறுப்பாளர் ஏ.எஸ்.ஜமால், மாவட்ட மகளிர் அணி தலைவி அன்புராணி, மீனவர் அணி செயலாளர் அந்தோணி சுரேஷ், இளைஞர் அணி தலைவர் ஜெயசீலன் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்