10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என்று மட்டுமே அறிவிக்க முடிவு…! – பள்ளிக்கல்வித்துறை
- 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக மதிப்பெண் வழங்கப்படாது.
- தேர்ச்சி என்று மட்டுமே மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த ஆலோசனையின்படி, 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் 5 பாடங்களுக்கான மதிப்பெண்களை தனித்தனியாக வழங்காமல், மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, 10-ம் வகுப்பு தேர்விற்கு மாணவர்களிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டிருப்பதால், அவற்றை சரிபார்த்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. மதிப்பெண் பட்டியலில் மாணவர்களின் பதிவு எண்கள் இடம்பெறும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தயார் செய்து, பள்ளிக்கல்வித்துறை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.