கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 40 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்!
- ஊரடங்கு காரணமாக மது கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் மதுக்கடத்தல் செய்யப்பட்டு வருகிறது.
- கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதிலும் மதுபான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக கர்நாடக மாநில எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்கள், கர்நாடகாவில் இருந்து காய்கறி பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரக்கூடிய வாகனங்களில் மது கடத்தல் நடைபெற்றதாக கூறியுள்ளார். மேலும், ஊரடங்கு போடப்பட்டுள்ள இந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை கடத்தி வந்த 40 கார்கள் மற்றும் 80 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.