3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி – சீனாவுக்கு அங்கீகாரம் அளித்த WHO!
- சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- சீன நிறுவனம் சைனோவேக் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகம் முழுவதையும் வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அண்மை காலங்களாக மிக குறைவான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தற்பொழுது பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அது போல சீனாவிலும் சைனோபார்ம் எனும் தடுப்பூசி ஒப்புதல் பெற்று பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
பல்வேறு நாடுகளிலும் தற்பொழுது அதிகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பலரும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் உள்ள சைனோவேக் எனும் நிறுவனத்தால் கண்டறியப்பட்ட கொரோனாவேக் எனும் தடுப்பூசி மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தும் படி கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் யின் வெயிடாங் கூறியுள்ளார்.
மேலும், இந்த தடுப்பூசியை இரண்டு கட்டங்களாக 3 முதல் 17 வயதிற்குட்பட்ட நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களிடம் சோதனை செய்ததாகவும், இந்த சோதனையில் இது நம்பகமானது மற்றும் செயல்திறன் மிக்கது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது எனவும் அந்நிறுவன தலைவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருந்த உலக சுகாதார அமைப்பு, இந்த சைனோவேக் நிறுவனத்தின் தயாரிப்பான கொரோனாவேக் தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.