நாட்டில் நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் – ப.சிதம்பரம்!
- நாட்டில் நடுத்தர மக்கள் ஏழைகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.
- நாட்டில் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பு தற்பொழுது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார விளைவுகளை குறித்து தொடர்ந்து விமர்சித்து வரக்கூடிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தற்போது நாட்டில் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றை மத்திய அரசு கையாண்ட விதத்தை தான் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும், மத்திய அரசு கையாண்ட விதத்தால் நாட்டில் 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இது குறித்து 1004 வல்லுநர்களை வைத்து அறிவுபூர்வமாக தான் ஒரு ஆய்வை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.
அவர் நடத்திய ஆய்வின் மூலம் நடுத்தர மக்கள் ஏழைகளாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கும், இவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது எனவும், 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு காரணம் மோடி அரசின் இயலாமையும், தவறான கொள்கையும் தான் என்று குற்றம் சாட்டுவது நியாயம் தானே எனவும், சிதம்பரம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.