“மத்திய அரசை,மத்திய அரசு என்றே அழைக்கலாம்” – எடப்பாடி பழனிச்சாமி பதில்…!
“மத்திய அரசை,மத்திய அரசு என்றே அழைக்கலாம்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன்,அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-
- நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன.ஆனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை போதாது.
- கடந்த ஆட்சியில் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.இதனால் நோய் பரவல் அதிகரிக்கிறது.
- அதேபோன்று கடந்த ஆட்சியில் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து,நோய் அறிகுறிகள் இருக்கிறதா? என்பதை கண்டறியும் சோதனைகள் நடைபெற்றது. ஆனால்,தற்போது பொதுமக்களை சந்தித்து நோய் அறிகுறிகள் இருப்பவர்களின் கணக்குகள் எடுக்கப் படவில்லை என்ற தகவல்கள் வருகிறது.
- தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசியை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
- அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்து விட்ட சசிகலாவின் பெயரில், வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதாக ஆடியோ வெளியிடப்படுகிறது.
- இன்று அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இதில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
- மேலும்,சென்னையில் புது வீட்டுக்கு இடம் பெயர்ந்ததால் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
இதனையடுத்து,செய்தியாளர்கள்,மத்திய அரசை,ஒன்றிய அரசு என்று தான் அழைக்க வேண்டும் என்று கருத்து தற்போது அதிகமாக வலுக்கிறது. இதற்கு உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,”பொது மக்களின் கருத்து என்னவோ அதற்கு முக்கியத்துவம் அளிப்போம்.தற்போது பொதுமக்கள் மத்திய அரசு, மாநில அரசு என்று தான் அழைக்கிறார்கள்.அதனால் மத்திய அரசு என்றே அழைக்கலாம்”, என்றார்.