IPL 2018:புள்ளிப்பட்டியலில் முன்னேரப்போவது யார் ?மும்பையா ?ராஜஷ்தானா?இன்று பலப்பரீட்சை!
ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் தொடரில் 21ஆட்டத்தில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.
3 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனை மோசமாக தொடங்கியது. முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புத்துயிர் பெற்றுள்ளது. அந்த ஆட்டத்தில் முதல் இரு பந்துகளில் 2 விக்கெட்களை இழந்த போதிலும் தொடக்க வீரரான எவின் லீவிஸூடன் இணைந்து கேப்டன் ரோஹித் சர்மா அணியை மீட்டெடுத்தார்.
6 ரன்களில் சதத்தை தவறவிட்டிருந்த ரோஹித் சர்மாவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோல் 65 ரன்கள் விளாசிய எவின் லீவிஸூம் மிரட்டக் காத்திருக்கிறார்.
கெய்ரன் பொலார்டு காயத்தில் இருந்து மீண்டுள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கக்கூடும். மேலும் ஹர்திக் பாண்டியாவும் பார்முக்கு திரும்பி உள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 5 பந்துகளில் 17 ரன்கள் விளாசியிருந்தார். மும்பை அணியின் பந்து வீச்சும் நம்பிக்கை உணர்வை பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆட்டத்தில் டி வில்லியர்ஸ், குயிண்டன் டி காக், கோரே ஆண்டர்சன் உள்ளிட்ட அதிரடி வீரர்களை பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவிடாமல் கட்டுப்படுத்தினர்.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 ஆட்டத்தில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த தொடரை தோல்வியுடன் தொடங்கிய போதும் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்றது.
ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்துள்ளது. கடைசியாக நேற்றுமுன்தினம் சென்னை அணியிடம் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பந்து வீச்சு, பேட்டிங்கில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இளம் வீரரான சஞ்சு சாம்சன், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசினார். அதன் பிறகு அவரிடம் இருந்து சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. அவரை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இதுவரை குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்பு செய்யவில்லை. பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர்கள் வரிசையில் மாற்றங்கள் செய்யக்கூடும் என கருதப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.