நீட் தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது.?- கி.வீரமணி..!
சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர், கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதற்கு பதிலாக நீட் தேர்வை ரத்து செய்யலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது. தமிழ்நாடு அரசு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சி பொறியில் சிக்காமல் மாணவர் நலனை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் எதிர்கால வளர்ச்சி கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு +2 தேர்வை ரத்து செய்தால் அது தகுதி திறமை பேசி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்ணை குத்தும். மருத்துவக் கல்லூரிகளுக்கு தகுதியுள்ள மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய சட்டப்படி உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.