நான் யாரையும் மிரட்டவில்லை; என்னை தான் 3 கோடி கேட்டு மிரட்டுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!
நடிகை சாந்தினி தனக்கு யார் என்றே தெரியாது எனவும், தன்னிடம் 3 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர் தான் நடிகை சாந்தினி தேவா. இவர் முன்னாள் ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ மணிகண்டன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் மணிகண்டனுடன் 5 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்யாமல் தன்னை ஏமாற்றுவதாகவும், தன்னை பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்து அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், திருமணம் குறித்து பேசினால் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ள அவர், தன்னை கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டுகிறார் என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இதற்கு பதிலளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்கள், நடிகை சாந்தினி என்பவர் யார் என்றே எனக்கு தெரியவில்லை எனவும், நான் அரசியல்வாதி ராமநாதபுரம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளேன், எத்தனையோ பேரை இதுவரை சந்தித்துள்ளேன்.
அது போல சாந்தினியும் நான் சந்தித்து இருக்கலாம். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு தற்பொழுது தன் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளதாகவும், எனது அரசியல் எதிரிகள் பின்னணியில் இதுபோன்ற புகார் மனு கொடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பதாக வக்கீல் ஒருவரும் போலீஸ் அதிகாரி ஒருவரும் தன்னிடம் பேசியதாகவும், சாந்தியுடன் நான் ஒன்றாக எடுத்த புகைப்படம் ஒன்று தங்களிடம் உள்ளதாகவும் அதை வைத்து போலீசில் புகார் கொடுக்கப் போவதாகவும் கூறினார்கள்.
அவ்வாறு புகார் கொடுக்க கூடாது என்றால் மூன்று கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டினார்கள். ஆனால், நான் செய்யாத தவறுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டதும், மூன்று கோடி கேட்டவர்கள் படிப்படியாக குறைத்து 50 லட்சம் வரை இறங்கி வந்தனர். ஆனால் நான் அதையும் தர முடியாது எனக் கூறி விட்டேன். தற்பொழுது என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார்கள். பணம் பறிக்கும் கும்பல் சாந்தினியை தவறாக பயன்படுத்துகிறது. நான் இந்த பொய்யான புகாரை சட்டப்படி சந்திப்பேன் என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.