#Breaking:திங்கள் முதல் கட்டுமானத் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி-டெல்லி முதல்வர் அறிவிப்பு..!
திங்கள் முதல் கட்டுமானத் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,டெல்லியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்தது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்தது.
இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை அமலில் இருந்தது, இதனையடுத்து,மே 31 ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையில்,ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில்,கொரோனா பாதிப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடந்த பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில்,திங்கள் முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில்,மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,”டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.அதாவது,கொரோனா தொற்று விகிதம் 1.53 விழுக்காடாக குறைந்துள்ளது.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,072 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இருப்பினும்,அன்றாட கூலித் தொழிலாளர்களை மனதில் கொண்டு கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் திங்கள்கிழமை முதல் இயங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும்,நிபுணர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும்”,என்று கூறினார்.