“சர்ச்சை வேண்டாம்;சட்டத்திற்கு கட்டுப்படுங்கள்”-ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பதில்..!

Default Image

இந்திய அரசின் சட்டத்திற்கு கட்டுப்படுங்கள் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

காங்கிரஸ் டூல்கிட் தொடர்பாக ட்விட்டர் அலுவலத்திற்கு சென்று காவல்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கிய நிலையில்,இந்தியாவில் உள்ள தங்களது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.

இதற்கிடையில்,மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனையடுத்து,இந்த புதிய விதிகளினால் இந்தியாவில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

இந்த விதிமுறைகள் குறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,”இந்திய மக்களுக்கு சேவை வழங்குவதில் ட்விட்டர் எப்போதுமே பொறுப்புடன் செயல்படும்.தொடர்ந்து இந்தியாவில் சேவை வழங்க சட்ட விதிமுறைகளின்படி செயல்பட ட்விட்டர் தயாராகவே உள்ளது. ஆனால்,கருத்து சுதந்திரம் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ள முறைகளை கையாள்வது கவலை அளிக்கிறது.

மேலும்,சட்ட விதிமுறைகளை மதிப்பதுடன் அதேசமயம் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் கருத்து சுதந்திரம்,வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட கொள்கைகளின்படி இயங்குவதுமே சரியானதாகும்.எனவே புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்”,என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,”உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு ஒரு சமூக ஊடகமான நிறுவனமான ட்விட்டர்,ஆணையிட முயல்கிறது.மேலும்,நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்தியாவின் சட்ட திட்டங்களை வேண்டுமென்றே தரம் தாழ்த்தும் நோக்கில் முயலுவதாக தெரிகிறது.குறிப்பாக குற்றச்செயலை தடுக்கும் நோக்கில் செயல்படும் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் புதிய நெறிமுறைகளுக்கு கட்டுப்படவும் மறுக்கிறது”,எனத் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய அரசு கூறியதாவது,”தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதை விட்டுவிட்டு,நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்படுங்கள்”,என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு பதில் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்