103 வயதுடைய சுதந்திர போராட்ட போராளி எச்.எஸ்.துரைசாமி காலமானார்!
சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி பிறந்தவர் தான் இந்திய சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி. இவர் 1943ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சுதந்திரப் போராட்ட போராளியாக 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பும் தொடர்ந்து சமூக ஆர்வலராக பணியாற்றிவந்த எச்.எஸ்.துரைசாமி அவர்களுக்கு கடந்த மே 8-ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுதந்திரப் போராளி எச்.எஸ்.துரைசாமி அவர்கள் மே 13 அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் தனக்கு உடல் பலவீனம் இருப்பதாக கூறி மீண்டும் மே 14 ஆம் தேதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்து அண்மையில் வீடு திரும்பிய அவருக்கு திடீரென இன்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். தனது 103 வயதில் சுதந்திரப் போராளி எச்.எஸ்.துரைசாமி அவர்கள் தற்போது உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா, முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.