அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்..!
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த யாஸ் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிரப் புயலான யாஸ்,தற்போது அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை நிலவரப்படி,ஒடிசா மாநிலம் பாரதீப்பிற்கு வட கிழக்கில் 90 கி.மீ. தொலைவிலும்,மேற்கு வங்க மாநிலம் திகாவுக்கு தென்கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது.
இந்நிலையில்,யாஸ் புயலானது தொடர்ந்து 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.இதனால்,பாரதீப்பிற்கும்,சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் அருகே இன்று நண்பகல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும்,கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா,மேற்கு வங்க மாநிலங்களின் தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 20 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ராணுவம், விமானப்படை,கடற்படை மற்றும் பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.