ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் குறித்த சில விவரங்கள்..!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் வருகை விபரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஹீரோ நிறுவனத்தின் பிரிமியம் பைக் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த பைக் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
இந்த நிலையில், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் இந்த புதிய பைக் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. நேக்கட் ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் சிபிஇசட் எக்ஸ்ட்ரீம் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாடல்.
இந்த பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகள், சிறிய வைசர் மற்றும் கவர்ச்சிகரமான முன்புற கவுல் அமைப்புடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. எல்இடி டெயில் லைட், பிளவுபட்ட கிராப் ரெயில் மற்றும் ஸ்டெப் அப் சீட் அமைப்பு, அகலமான பின்புற டயர் மற்றும் குட்டையான மட்கார்டு அமைப்பு ஆகியவை தோற்றத்திற்கு வலு சேர்க்கும் அம்சங்கள். புதிய 200சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும், 17.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்ரபாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பைக் லிட்டருக்கு 39.9 கிமீ மைலேஜ் தரும். முன்புறத்தில் 37மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 276மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது. 17 அங்குல அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் ரூ.85,000 எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.