சாத்தான்குளம் வழக்கு.., சிபிஐ பதில் தர உத்தரவு..!
சாத்தான்குளம் வழக்கில் ரகு கணேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ பதில் தர உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ், ஆகியோர் மாறி மாறி ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்து இருந்தனர்.
ஆனால் இவர்களின் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுவை ஆய்வாளர் ரகு கணேஷ் தாக்கல் செய்தார். இந்நிலையில், ரகு கணேஷ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய ஆய்வாளர் ரகு கணேஷ் மனுவுக்கு சிபிஐ பதில் தர உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.