கொரோனா அச்சம்: ஹுண்டாய் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!
கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலையின் ஊழியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால்,இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதனால்,காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும்,சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில்,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஹுண்டாய் தொழிற்சாலை இந்த ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருகிறது.ஆனால்,தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால்,நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்து மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூன்று ஷிப்ட் கணக்கில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில்,இன்று ஹூண்டாய் தொழிற்சாலை ஊழியர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து,அவர்கள் கூறுகையில் ,”தொடர்ந்து தொழிற்சாலை இயங்கி வருவதால் இதுவரை 500 பேருக்கும் அதிகமான நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.மேலும், கொரோனாவால் இதுவரை 10 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.அதனால், தொழிற்சாலை தொடர்ந்து செயல்படுவதால் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே,,ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்”,என்று கோரிக்கை விடுத்து உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,நிர்வாகத்தினருக்கும்,ஊழியர்களுக்குமிடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.