முழு ஊரடங்கு ஒரு கசப்பு மருந்து தான்…! ஆனால் அனைவரும் அருந்தி தான் ஆக வேண்டும்…! வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம். வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முழு ஊரடங்கு அமல்ப்படுத்தியது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.
அதன் பின் பேசிய அவர், மே 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்தோம். ஆனால் மக்கள் சிலர் இந்த தளர்வுகளை பயன்படுத்தி வெளியில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தனர். எனவே தான் தற்போது தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளோம். கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு தவிர வேறு வழியில்லை. கொரோனா தானாக பரவுவதில்லை. மனிதர்கள் மூலமாக தான் பரவுகிறது. அத்தகைய மனிதர்களாக யாரும் இருக்கக்கூடாது.
யாருக்கும் கொரோனா வைரஸை பரப்பவும் மாட்டேன். மற்றவர்களிடம் இருந்து இந்த வைரஸை வாங்கவும் மாட்டேன் என பொதுமக்களாகிய நீங்கள் உறுதி எடுக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பல மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தொட்ட பின் தற்போது அதன் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் தற்போது தான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மக்களின் தேவை இல்லாத வெளி நடமாட்டம் தான்.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்திய பின் சிறிதளவு தொற்று குறைந்துள்ளது. ஆனால் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. முழு ஊரடங்கு ஒரு கசப்பு மருந்து தான். ஆனால் அனைவரும் அதை அருந்தி தான் ஆக வேண்டும். நாட்டு மக்களை கெஞ்சி கேட்கிறேன். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். மருத்துவ தேவைகளுக்காக மட்டும் வெளியில் வெளியில் செல்லுங்கள்.
எங்களது இலக்கு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது. இன்னொன்று தொற்றால் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுப்பது தான். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காக தான் கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறு குறு நிறுவனங்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ டாக்ஸி உரிமையாளர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். இந்த ஒரு வாரம் முழு ஊரடங்கை நாட்டு மக்கள் அனைவரும் தவறாது கடைபிடித்தால் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் சகோதரனாக உங்களில் ஒருவனாக கேட்டுக்கொள்ளுகிறேன் முக கவசத்தை முழுமையாக அணியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து #COVID19 பரவல் சங்கிலியை உடைப்போம். pic.twitter.com/kfvsoCpZph
— M.K.Stalin (@mkstalin) May 24, 2021