காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – சுகன்தீப் சிங் பேடி
பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் காய்கறி மற்றும் பழங்களை, நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகம் செய்திட வணிகர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி கூறுகையில், அனைத்து வார்டுகளிலும் மூன்று சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் சம்பந்தப்பட்ட மண்டல அளவிலான அனுமதி பெற்று விற்பனை செய்ய வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யும் வாகனங்களுக்கு தேவையான பதாகைகள் சென்னை பெருநகர மாநகராட்சி விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் கூறுகையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யும் விற்பனையாளர்கள் வணிகர் சங்கத்துடன் இணைந்து முகக்கவசம், கிருமிநாசினி போன்ற பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்படும் என்றும், அனைத்து விற்பனையாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதற்காக கோயம்பேடு வணிக வளாக மையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.