“பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!
“பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இருந்தாலும்,கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது என்றும்,கொரோனா நிவாரண நிதியை அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பெற்றுக் கொண்டனர் என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும்,
மேலும்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன்,படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.காய்கறி,பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை,வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அந்த வகையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியதாவது,”பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும். இந்த முழு ஊரடங்கால் தமிழக மக்களின் உணவுத் தேவைக்கு எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று பசியாற்றுங்கள்.
மேலும், எந்தவிதமான விதிமீறல்களிலும் ஈடுபடாமல்,ராணுவத்திற்கு நிகரான கட்டுப்பாட்டுடன் உதவிப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்”,என்றும் கூறியுள்ளார்.