கொரோனா இரண்டாம் அலையால் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு – இந்திய மருத்துவ சங்கம்!
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒருபுறம் இருக்க பற்றாக்குறை,மருந்து மற்றும் படுக்கை வசதிகள் குறைவாலும் பலர் சிகிச்சை எடுக்க முடியாமல் உயிரிழந்து விடுகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுடன் சேர்ந்து கொரோனா காலகட்டத்தில் முன்களப்பணியாளர்களாக பணியாற்ற கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் இந்த கொரோனவால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் மட்டும் அல்லாமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில் இரண்டாம் அலை பரவத் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 41 மருத்துவர்களும் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.