அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் பாதியாகக் குறைக்கப்படுமா?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்..!
ஓராண்டாக வேலையின்றி உள்ள ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து,கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளம் அதிகப்படுத்தபடுமா?,என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.17.37 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சத்திரம் புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்கப்பட்டு 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில்,தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,”திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பணிகள் விரைவில் முடிவடைந்து முழு பயன்பாட்டிற்கு வரவுள்ளது”,என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து,”கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகே, பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இருப்பினும் மாணவர்கள் படிப்பறிவு விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக அலகு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
மேலும்,ஓராண்டாக வேலையின்றி உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து,கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல் வருகிறது.இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று முடிவெடுக்கப்படும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.