கொரோனாவால் ‘பில்லா பாண்டி’ மூர்த்தி உயிரிழப்பு…!
கொரோனா தொற்று காரணமாக ‘பில்லா பாண்டி’ எழுத்தாளர் எம்.எம்.எஸ்.மூர்த்தி உயிரிழந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக,திரைத்துறை பிரபலங்கள்,முக்கிய இயக்குநர்கள் உள்ளிட்டவர்கள் அதிகமாக உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில்,தமிழ் சினிமா மேனேஜரும்,பில்லா பாண்டி படத்தின் எழுத்தாளர் எம்.எம்.எஸ்.மூர்த்தி (வயது 48) கொரோனா தொற்று காரணமாக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி மூர்த்தி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,மறைந்த மூர்த்திக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும்,அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் உயிரிழப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு,இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா,அசுரன் பட நடிகர் நிதிஷ்வீரா ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.