தூத்துக்குடியில் கருப்பு பூஞ்சை தொற்றினால் தொழிலாளி பலியா?: மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம்
தூத்துக்குடியில் கரும்பூஞ்சை நோய்க்கு தொழிலாளி பலியாகவில்லை என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
தூத்துக்குடி,கோவில்பட்டியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சவுந்தர்ராஜன்(57) என்பவர் கொரோனா அறிகுறிகள் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நெகடிவ் என வந்தது.இருப்பினும் உடல்நிலைமிகவும் மோசமாக இருந்ததன் காரணமாக சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் உயிரிழந்தார்.
இது குறித்து சவுந்தர்ராஜனின் மகன் விஜயராஜ் கூறுகையில்,”எனது தந்தைக்கு கண்களில் வீக்கம், தானாக நீர் வடிதல்,பார்வை குறைவு பிரச்னைகள் ஏற்பட்டது.உடனே சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் பார்த்தபோது கணிக்க முடியாத வைரசாக இருக்கலாம் எனக்கூறி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என கண்டறியப்பட்டது.
இதனையடுத்து,இது கரும்பூஞ்சை நோயின் அறிகுறிதான்,இங்கு அதற்குரிய மருந்து இல்லை என சாதாரண கண் நோய்க்கான சிகிச்சை மட்டுமே மருத்துவர்கள் அளித்தனர். எனது தந்தை கடைசிவரை கண்ணை திறக்காமலே இறந்துவிட்டார்”, என கண்ணீருடன் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதிபாலன் கூறுகையில்,கொரோனா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சவுந்தரராஜன் கரும்பூஞ்சை நோய்த் தொற்றினால் இறக்கவில்லை.அவர் கொரோனா எதிர்வினை பாதிப்பு காரணமாகவே இறந்தார்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் கண் மருத்துவ துறையின் சிறப்பு மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தார்.அவருக்கு கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டது.
அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்றாலும் உருமாறிய கொரோனாவால் அவரது நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் உயிரிழந்தார். எனவே சவுந்தர்ராஜன் கரும்பூஞ்சை நோயினால் இறந்தார் என்பது தவறான தகவல். கரும்பூஞ்சை நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் இங்கு உள்ளன”, என்று கூறினார்.