ஜூலை மாதத்தில் முடிவடையும் கொரோனா இரண்டாவது அலை..!அடுத்த 6 மாதங்களில் தொடங்கும் மூன்றாம் அலை – மத்திய வல்லுநர் குழு தகவல்…!
ஜூலை மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை முடிவடையும் என்றும்,எனினும்,அடுத்த 6 மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கும் என்றும் மத்திய வல்லுநர் குழு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவலானது முன்பை விட மெல்லக் குறைந்து வருகிறது.மேலும்,மகாராஷ்டிரா,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளது.ஆனால்,தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கமானது தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில்,இந்தியாவில் கொரோனா பரவலின் நிலை குறித்தும்,அதனை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கவும் மத்திய அரசு மூன்று ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்த குழு சூத்ரா – SUTRA (Susceptible, Undetected, Tested (positive) and Removed Approach) என்ற முறையின் அடிப்படையில் தற்போது,கொரோனா 3 ஆம் அலை பற்றிய கணிப்புகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
அதன்படி,இந்தியாவில் மே மாத இறுதியில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கும் என்றும்,ஆனால்,ஜூன் மாத இறுதியில் தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 20,000 ஆக குறையும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
குறிப்பாக,தமிழ்நாட்டில் வரும் மே 29 முதல் 31 ஆம் தேதி வரையிலும், புதுச்சேரியில் 19 முதல் 20 வரையிலான தேதிகளிலும் கொரோனா உச்சமடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும்,கொரோனா பரவலின் 3 ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும்,இருப்பினும்,அதிக பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.