வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய சீனாவின் தியான்வென் – 1 விண்கலம்!
சீனா அனுப்பிய தியான்வென் – 1 எனும் விண்கலம் தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது என சீன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு தங்கள் ஆதிக்கத்தை விண்வெளியில் நிலைநாட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதில் இந்தியா சந்திராயன் விண்கலத்தை விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி நிலவில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி சற்று ஒரு படி மற்ற நாடுகளில் இருந்து முன்னேறி உள்ளது என்று கூறலாம். இந்த வகையில் தற்போது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா தியான்வென் -1 எனும் விண்கலத்தை அனுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் இந்த விண்கலத்தை சீனா நுழைத்தது. ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் மொத்தம் 240 கிலோ எடை கொண்ட நிலையில், இந்த ரோவர் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது என சீனா சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்கலம் புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்து அனுப்பும் எனவும், செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களை எடுக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறையின் தன்மை, நீர் ஆகியவற்றை இந்த விண்கலம் ஆராய்ச்சி செய்து அனுப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.