தூங்கிக் கொண்டிருந்த பொழுது நாய் கடித்ததால் உயிரிழந்த கூலித்தொழிலாளி – நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு!
பெங்களூரில் நேற்று முன்தினம் கட்டுமான தொழிலாளி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த பொழுது நாய் கடித்ததில் அந்த நபர் துடி துடித்து உயிரிழந்துள்ளார்.
செல்லப்பிராணிகள் என்றாலே தற்பொழுது அதிக அளவில் அனைவர் வீட்டிலும் வளர்க்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. நாய், பூனை, முயல், அணில் என ஒவ்வொரு சின்ன சின்ன விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அவற்றை வெளியில் வாக்கிங் அழைத்துச் செல்வதும் வழக்கம். அதுபோல பெங்களூரில் உள்ள எலகங்கா காவல்சரகத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் அடுக்குமாடி வீட்டில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டு இருந்துள்ளது. இந்த கட்டுமான பணியில் ஈடுபட்ட 36 வயதுடைய நரசிம்மா என்பவர் வேலை நேரம் முடிந்து ஓய்வு எடுப்பதற்காக மாடிப்படியின் கீழ் தூக்கிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவ்வழியே வந்த பிட்புல் எனப்படும் வெளிநாட்டு ரகத்தை சேர்ந்த நாய் ஒன்று அதன் உரிமையாளருடன் அவ்வழியே வந்துள்ளது. அப்பொழுது கீழே தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி நரசிம்மா மீது அந்த நாயை திடீரென பாய்ந்து அவரை கடித்து குதறி உள்ளது. கழுத்தை கெட்டியாக பிடித்து அந்த நாய் கடித்ததில் நரசிம்மா அலறி அடித்து துடித்துள்ளார். இதனையடுத்து நாயை தடுக்க சென்ற உரிமையாளரையும் அந்த நாய் கடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
நரசிம்மாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் துடித்த நரசிம்மாவை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே நரசிம்மா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாய் கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் நாயை அலட்சியமாக அழைத்து சென்ற உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.