இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதல்! காசாவில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

Default Image

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதலில் காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,இஸ்ரேலில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கடந்த திங்களன்று பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து,பாலஸ்தீனர்களைக் கட்டுபடுத்த இஸ்ரேல் காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.இந்த கலவரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.இருப்பினும்,இந்த மோதலில் 21 காவல்துறையினரும் காயமடைந்ததாக இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வன்முறைகளுக்கு மத்தியில்,ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் திங்கள் இரவு காசாவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.இதில்,ஒன்பது குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து,கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.இதில்,7 பேர் கொல்லப்பட்டனர். அதில்,கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த செவிலியர் சவுமியா என்பவர் உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தின்படி,புதன்கிழமையான நேற்று காலை 6 மணி முதல் 180 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டன,அவற்றில் 40 காசாவில் விழுந்தன.இதனைத் தொடர்ந்து,இஸ்ரேல் ராணுவம் நேற்றும் காசா பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது.அதில்,ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து,இந்த தாக்குதலில் இதுவரை 16 குழந்தைகள் உட்பட மொத்தம் 65 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும்,86 குழந்தைகள் மற்றும் 39 பெண்கள் உட்பட குறைந்தது 365 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும்,இஸ்ரேல் இராணுவத்தினரை எதிர்த்து ஹமாஸ் குழு நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்