கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10,00,000 வழங்கிய மதிமுக – வைகோ அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்குவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கமாறு அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், கொரோனாவால் ஏற்படுத்தி இருக்கின்ற பாதிப்புகளை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசு மேற்கொள்கின்ற மக்கள் நல்வாழ்வு மருத்துவப் பணிகளுக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு தாங்கள் விடுத்து இருக்கின்ற அழைப்பை ஏற்று, மதிமுக சார்பில், ரூ.10,00,000 நிதி வழங்குகின்றோம் என்றும் அதற்கான காசு ஓலையை, இத்துடன் இணைத்து இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.