தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!
இன்று சபாநாயகர் பதவி ஏற்பு, வாழ்த்துரை முடிந்ததை அடுத்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
16-வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக இருந்த கு.பிச்சாண்டி தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும், தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நேற்று பகல் 12 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் பதவிக்கு அப்பாவும், துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்தார்.
வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 2-வது நாளாக இன்று காலை சட்டசபை கூடியதும் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தார்.
பின்னர், சபாநாயகர் அப்பாவு துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தார். இன்று சபாநாயகர் பதவி ஏற்பு, வாழ்த்துரை முடிந்ததை அடுத்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகர், துணை சபாநாயகரை வாழ்த்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர்கள் உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.