தெலுங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு
கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் மே 22 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது வேகமாகப் பரவி வரும் நிலையில்,தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து,தெலுங்கானா மாநிலத்திலும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில்,தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில்,கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு 10 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,நாளை (அதாவது மே 12, புதன்கிழமை) முதல் மே 22 வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.இருப்பினும்,தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.