#Breaking: தவறு செய்தால் பதவி நீக்கம் – அமைச்சர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்ததாக தகவல்!!
அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முதலாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து, அதிகாரிகள் வெளியே சென்ற பிறகு அமைச்சர்களுடன், முதலமைச்சர் முக ஸ்டாலின் தனியாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதாவது, அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் தங்கள் துறைகளின் நியமனங்கள், தனி உதவியாளர் நியமனங்களில் கூட வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எதாவது தொகுதிக்குள் பிரச்சனை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கட்சி பிரச்னைகளுக்காகவோ, மற்ற பிரச்னைகளுக்காகவோ காவல்துறைக்கு யாரும் நேரடியாக போன் செய்யவோ, நேரில் செல்லவோ கூடாது என்றும் மக்களுக்கு நல்ல நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பல எம்எல்ஏகளுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், நீங்கள் அமைச்சர்களாக உள்ளீர்கள். அதனால் மிகவும் நேர்மையாகவும், பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். எதாவது முறைகேடு நேர்ந்தால் பதவியில் இருந்து நீக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என கண்டிப்புடன் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.
மேலும், அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எப்போது கேட்டாலும் அதனை சரியாக சொல்ல வேண்டும். தமிழகத்தில் 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றும் நல்ல நிர்வாகத்தை கொடுத்தால் தான் மக்கள் ஆதரிப்பார்கள் எனவும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.