கொரோனாவால் இறந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 21 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு..!
ராஜஸ்தான் மாநிலத்தில்,கொரோனாவால் இறந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களை பொதுவாக பாதுகாப்பு உடை அணிந்து சுகாதாரப் பணியாளர்களேஅடக்கம் செய்து வந்த நிலையில், தற்போது உறவினர்களின் கோரிக்கையினால்,குடும்பத்தினரிடம் இறந்தவரின் உடல் ஒப்படைக்கப்படுகிறது.ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் கூறும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தான் இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில்,ராஜஸ்தான் மாநிலம்,சிகார் மாவட்டத்தில் உள்ள கீர்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும்,சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் 21ம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து,இறந்தவரின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் இறுதிச்சடங்கின் போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல், இறந்தவரின் உடலைச் சுற்றியிருந்த பிளாஸ்டிக் கவரைப் பிரித்து,உடலை தொட்டப்பார்த்து அழுதனர்.
இதனால்,இந்த இறுதிச்சடங்குகளில் பங்கேற்ற சுமார் 150 பேர்களில்,21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து,கீர்வா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “கொரோனா வைரஸ் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதால் கீர்வா கிராமத்தில் 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்” என்று கூறிப் பகிந்துள்ளார்.இது சமூக ஊடகங்களில் வைரலானது.அதன்பின்னர்,அந்தப் பதிவினை எம்.எல்.ஏ கோவிந்த் சிங் நீக்கியுள்ளார்.
ஆனால்,இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய லட்சுமங்கர் துணைப்பிரிவு அதிகாரி குல்ராஜ் மீனா, “உயிரிழந்த 21 நபர்களில் 4 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்.அதுமட்டுமல்லாமல்,இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியோர்களாக உள்ளனர்.இங்கு சமூக பரவல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 147 பேரின் மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்”,என்று தெரிவித்துள்ளார்.