தமிழகத்தில் ஆரம்பமானது முழு ஊரடங்கு;இன்று முதல் 24 ஆம் தேதி வரை அமல்..!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனாலும், கொரோனா அதிகரித்து கொண்டே செல்வதால் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை போல தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்றுமுதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் போது அனைத்துதனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள், பூங்காங்கள், அருங்காட்சியகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 28,897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13,80,259 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 7,130 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,90,589 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 236 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,648 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், 14 மாவட்டங்களுக்கு 22 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.