கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி மறுப்பு!

இந்தியா உட்பட கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. இந்த கொரோனாவின் தாக்குதலுக்கு எந்தவொரு நாடுமே தப்பிக்கவில்லை என்றுதான் கூறியாக வேண்டும். இந்நிலையில் சில கொரோனா பாதிப்பு குறைவான நாடுகள் அதிக பாதிப்பு கொண்ட நாடுளில் உள்ள மக்களை தங்கள் நாட்டுக்குள் விடுவதற்கும் அஞ்சுகின்றனர். அது போல சிங்கப்பூரிலும் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கான மற்ற நாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிங்கப்பூருக்குள் வருவதற்கு தற்போது வரை அனுமதி பெற்றவர்களும் வருவதற்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம் மற்றும் கப்பல் தொழில் செய்பவர்கள் ஒப்புதல் பெற்றபடி அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக கொரோனா தொற்று கொண்ட நாடுகளில் உள்ள மக்கள் சிங்கப்பூருக்குள் வருவதற்கு அனுமதி பெற்றிருந்தாலும், தற்பொழுது உள்ள நிலைப்படி அனுமதி மறுக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகி பின்னர் மீண்டும் எப்பொழுது சிங்கப்பூருக்கு நுழைவதற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தாங்கள் அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆஸ்திரேலியா, சீனா, நியூஸிலாந்து, தைவான், ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரக்கூடிய பயணிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்களுக்கு எல்லாம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு 11.59 மணியுடன் சிங்கப்பூரில் நுழைவதற்கு அனுமதி பெற்ற நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal