மத்திய விஸ்டா திட்டம் ஒரு குற்றவியல் விரயம் – ராகுல் காந்தி கடும் விமர்சனம்
சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஒரு கிரிமினல் விரயம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம்.
தலைநகர் டெல்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற திட்டத்தை மத்திய அரசு, செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பிரமாண்டமான 16,921 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டடம், மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது செயலகங்கள், பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவருக்கான இல்லம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்திற்காக, 13 ஆயிரத்து, 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமான ஒப்பந்தம், ‘டாடா’ குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவின்போது, இந்த நாடாளுமன்றக் கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக தாக்கி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால்,நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி என பல இடங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நோயாளிகள் தொடர்ந்த உயிரிழந்து கொண்டியிருக்கின்றனர்.
இந்த இக்கட்டான சமயத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது அவசியமா? என்று கேள்வி எழுப்பி, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஒரு கிரிமினல் விரயம்.
புதிய வீட்டைப் பெறுவதற்காக உங்கள் கண்மூடித்தனமான அகங்காரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் என்றும் மக்களின் உயிருக்கும், வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளியுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, கொரோனா சூழலில், ஏழை மக்களுக்கு நிதி உள்ளிட்ட அனைத்து வகையான உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசு தன்னுடைய விஸ்டா திட்டத்தை ஒதுக்கி வைத்து மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாட்டில் அத்தியாவசியமான மருத்துவக் கட்டமைப்புகளை அதிகமாக ஏற்படுத்தி, மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுபோன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கொரோனா சூழலில், மத்திய அரசு செய்யவேண்டிய சிறந்த பணி என்னவென்றால், நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி மக்களைக் காப்பாத்துவதுதான். ஆனால், அதை விடுத்து, பிரதமர் மோடிக்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய வீடு கட்டுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது என விமர்சித்து இருந்தார்.
Central Vista is criminal wastage.
Put people’s lives at the centre- not your blind arrogance to get a new house!
— Rahul Gandhi (@RahulGandhi) May 7, 2021