மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:பேராசிரியை நிர்மலா தேவிக்கு 5 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி சாத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சாத்தூர் நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிபிசிஐடி போலீசார் அளித்த மனுவை ஏற்று இந்த வழக்கு, அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் இருந்து, விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விருதுநகர் சிபிஐசிஐடி அலுவலகத்திற்கு, தேவாங்கர் கல்லூரியின் தலைவர் ஜெயசூரியன், துணைத் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் கல்லூரி செயலர் உள்ளிட்டோர், அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். கல்லூரியில் நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் என்ன? அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சிபிசிஐடியின் மற்றொரு குழு அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரிக்கு சென்று கல்லூரியின் பிற நிர்வாகிகள், ஊழியர்கள் பேராசிரியர், மாணவிகள் உள்ளிட்டோரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் மதுரை காமராஜர் பல்கலைகழகத் துணைவேந்தர் செல்லத்துரையிடமும் சிபிசிஐடி போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே பேராசிரியை நிர்மலா தேவியை தங்கள் காவலில் எடுத்து 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.இந்நிலையில் சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை ஆஜர்படுத்தியது போலீஸ்.சாத்தூர் நீதிமன்றத்துக்கு நிர்மலாதேவியை போலீஸ் அழைத்து வந்தபோது பெண்கள், வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர்.
தற்போது நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.