கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் பரவாது….! மனிதர்கள் மூலம் மட்டுமே மனிதர்களுக்கு பரவும்….!
வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவவில்லை. மனிதரிடம் இருந்து தான் மனிதருக்கு பரவுகிறது.
கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய என்ஐடிஐ அயோக் உறுப்பினர் வி.கே. பால் அவர்கள் கூறுகையில், ‘வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவவில்லை. மனிதரிடம் இருந்து தான் மனிதருக்கு பரவுகிறது. நீங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டால், உடல் வலி அல்லது காய்ச்சல் போன்ற பக்க விளைவுகளை அனுபவிக்கமாட்டீர்கள். இந்த அறிகுறிகளை நீங்கள் உணரவில்லை என்றால் நீங்கள் சாதாரணமாக இருக்க முடியும்.’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தேவையற்ற கூட்டங்களை தவிர்த்தல், வீட்டில் தங்கியிருந்தல் போன்ற நடத்தைகளை நாம் பின்பற்ற வேண்டும். இந்த நோய்க்கு எதிரான நீண்ட போராட்டத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உள்ள மக்களுக்கு மருத்துவ சகோதரர்கள் முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
எங்கள் வேண்டுகோள் என்னவென்றால், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ள மக்கள் மற்றும் குடும்பங்களுக்கு தொலை தொடர்புகளை பயன்படுத்தி மருத்துவர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். நோய் பரவுவதை தவிர்ப்பது அரசாங்கத்திற்கும், மக்களுக்குமான ஒரு பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.