அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஆகஸ்டு 1 ஆம் தேதிக்கு முன் அனுமதி இல்லை..!
வகுப்புகள் தொடங்கினாலும் அமெரிக்காவிற்குள் வர அனுமதி இல்லை.
ஐதராபாத்தில் உள்ள யு.எஸ். துணைத்தூதரக அலுவலகம் செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதன்படி கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மாணவர் விசா உள்ள எவரும் தங்கள் வகுப்புகள் ஆகஸ்ட் அல்லது அதற்குப் பிறகு தொடங்கினால் அமெரிக்காவில் நுழைய முடியும். மேலும், குறிப்பிட்ட தேதிக்கு முன்பே வகுப்புகள் தொடங்கும் என்றால் மாணவர்களுக்கும், எஃப்-1 விசா வைத்திருப்பவர்களுக்கும் தூதரகத்தால் விதிவிலக்குகளை அங்கீகரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பே செல்ல வேண்டியது அவசியம் என்றால் அவர்கள் தங்களுடைய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைத் தொடர்புகொண்டு வேறுஏதேனும் வழி உள்ளதா என்று கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் மாணவர்கள் மற்றும் எக்ஸ்சேஞ் விசிட்டர்ஸ் விசாசில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் உத்தரவிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் கல்விப் படிப்பைத் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்குள் நுழையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏப்ரல் 30 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் கொரோனா அதிகம் உள்ள நாடுகளான இந்தியா, சீனா, ஈரான் மற்றும் தெற்கு ஆப்ரிக்காவில் இருந்து வரும் மாணவர்களுக்கு அறிக்கையில் குறிப்பிட்ட தேதிக்கு முன் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.