ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் நடத்த பிசிசிஐ நிராகரிப்பு..?
ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாக சபை முன்வைத்த திட்டத்தை பிசிசிஐ மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், நேற்று கொல்கத்தா, சென்னை அணியில் தலா 2 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், நேற்று நடைபெறவிருந்த பெங்களூர், கொல்கத்தா போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று விருத்திமான் சஹா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் கொரோனா உறுதியானதை தொடர்ந்து பி.சி.சி.ஐ நடப்பு ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாக சபை முன்வைத்த திட்டத்தை பிசிசிஐ மறுத்துவிட்டதாக இப்போது தகவல்கள் வெளிவருகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 13-வது ஐபிஎல் தொடர் சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நடைபெற்றது. ஏப்ரல் 9 ஆம் தேதி நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை குறையவில்லை. இதனால், ஐபிஎல் நடப்பு தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாக சபை முன்மொழிந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் தொடரை நடத்தும் திட்டத்திற்கு நான்கு ஐபிஎல் உரிமையாளர்கள் ஆதரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இந்த திட்டத்திற்கு அனுமத்தி வழங்கவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் நிர்வாக சபையின் முன்மொழிவை பிசிசிஐ ஏற்றுக்கொண்டிருந்தால் இவை அனைத்தையும் தவிர்த்து இருந்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது.