பா.ஜ.கா.,விற்கு எதிராக டுவிட்டரில் தனது பெயரை மாற்றிய குஷ்பு !
நடிகை குஷ்பு டுவிட்டரில் உடனுக்குடன் சமூக, அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் அவ்வப்போது அவருக்கு எதிரான விமர்சனங்களும் வருகின்றன. அவற்றை துணிச்சலாக எதிர்கொள்கிறார். தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பதிவிடுகிறவர்களுக்கு பதிலடி கொடுத்து அதிரவும் வைக்கிறார்.
சில நடிகைகள் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் டுவிட்டரை விட்டே வெளியேறும் சூழ்நிலையில் குஷ்புவின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து பதிவிட்டதற்காக தன்னை கூத்தாடி என்றவருக்கும் பதில் அளித்தார். தற்போது பா.ஜனதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் தனது பெயரை குஷ்பு சுந்தர் என்பதை பா.ஜனதாவுக்காக நக்கத் கான் என்று மாற்றி இருக்கிறார்.
இதுவரை குஷ்பு சுந்தர் என்றே அவரது பெயர் டுவிட்டரில் இருந்தது. அவரது இயற்பெயர் நக்கத் கான். இந்த பெயரை பா.ஜனதா கட்சியினர் ஏற்கனவே வெளியிட்டு கிண்டல் செய்தனர். அதற்கு, ‘என் பெயர் நக்கத் கான் என்பதை இப்போதுதான் கண்டுபிடித்தீர்களா?’ என்று பதில் அளித்தார். என் பெயர் நக்கத் கான் என்பதை மறைக்கவில்லை என்றும் கூறினார்.
இந்த நிலையில்தான் தற்போது ‘குஷ்பு சுந்தர் பா.ஜனதாவுக்காக நக்கத் கான்’ என்று டுவிட்டரில் தனது பெயரை குறிப்பிட்டு இருக்கிறார். குஷ்புவின் செயலை பார்த்து ரசிகர்கள் பலர் டுவிட்டரில் பாராட்டி வருகிறார்கள்.