பாஜகவை எதிர்த்தால் காங்கிரஸ் கட்சி தோல்வியையே சந்திக்கும் !அமைச்சர் ராஜ்நாத் சிங்
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களை தவறாக சித்தரிக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைவதாக தெரிவித்துள்ளார்.
நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், பொதுநல மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசையும், பாரதிய ஜனதா கட்சியையும் தவறாக சித்திரிக்க முயல்வதை இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியிருப்பதாகவும், ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தீய நோக்கத்துடன் காங்கிரஸ் செயல்படுவதை, இத்தீர்ப்பு மீண்டும் நிரூபித்திருப்பதாக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதி லோயா மரணம் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பலரை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.