#IPL2021: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. வீரர்களை தொடர்ந்து விலகும் “அம்பயர்கள்”
ஐபிஎல் தொடரில் இருந்து அம்பையர்களான இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரெய்பல் விலகியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலுக்கும் மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் குணமடைந்து மீண்டும் அணியுடன் இணைந்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்கள். வீரர்கள் பலரும் வெளியேறி வரும் நிலையில், அணி நிர்வாகம் திணறி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்த அணியில் ஒரு வீரர் விலகினாலும் அணிக்கு சிக்கல்.
வீரர்கள் வெளியேறி வரும் சூழலில், ஐபிஎல் தொடரில் இருந்து அம்பையர்களான இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரெய்பல் விலகியுள்ளார். ஐசிசி எலைட் லிஸ்டில் இருக்கும் ஒரே இந்திய நடுவர் நிதின் மேனன் தான். மேலும், தவறு செய்யாத அம்பையர் என்று பெயரை நிதின் மேனன் பலமுறை பெற்றுள்ளார்.
இந்திய அம்பையரான நிதின் மேனனின் மனைவி மற்றும் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் வெளியேறியுள்ளதாகவும், இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளதால் ஆஸ்திரேலியா அம்பையரான பால் ரெய்பல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.