ஹைதராபாத் அணியை வீழ்த்தி.., முதலிடத்தை தட்டி பறித்த சென்னை..!
சென்னை அணி 18.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
ஐபிஎல் தொடரில் இன்று 23-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணியில்அதிகபட்சமாக டேவிட் வார்னர் 57, மனீஷ் பாண்டே 61 ரன்கள் எடுத்தனர். 172 ரன்கள் இலக்குடன் சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால், ருதுராஜ், டு பிளெசிஸ் இருவரும் அரைசதம் விளாசினர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த ஹைதராபாத் அணி திணறியது. அதிரடியாக விளையாடி வந்த ருதுராஜ் 44 பந்தில் 12 பவுண்டரி விளாசி 75 ரன்கள் எடுத்து ரஷீத் கான் வீசிய சூழல் பந்தில் போல்ட் ஆனார். ருதுராஜ், டு பிளெசிஸ் கூட்டணியில் 129 ரன்கள் எடுத்தனர்.
பின்னர், இறங்கிய மொயீன் அலி 8 பந்தில் 15 ரன்கள் எடுத்து கேதார் ஜாதவிடம் கேட்சை கொடுத்தார். அடுத்த பந்திலே டு பிளெசிஸ் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியாக சென்னை அணி 18.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை களத்தில் ஜடேஜா 7* , ரெய்னா 17* ரன்களுடன் நின்றனர்.
சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளனர். சென்னை அணி 5 போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை ஒரு போட்டியில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை புள்ளிப் பட்டியலில் முன்னேறியது. 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பெங்களூரு அணியை இரண்டாம் இடத்திற்கு தள்ளி மீண்டும் சென்னை அணி முதலிடத்தை பிடித்தது.