கடைசியில் இருந்த கொல்கத்தா பஞ்சாப்பை வீழ்த்தி முன்னேறியது..!
கொல்கத்தா அணி 16.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரின் 21-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இப்போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மாயங்க் அகர்வால் 31, கிறிஸ் ஜோர்டான் 30 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டையும் , பாட் கம்மின்ஸ், சுனில் நரைன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
124 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக நிதீஷ் ராணா, சுப்மான் கில் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே நிதீஷ் ராணா டக் அவுட் ஆனார். அடுத்து ராகுல் திரிபாதி களமிறங்க களத்தில் இருந்த சுப்மான் கில் 9 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். வந்த வேகத்தில் சுனில் நரைன் ரன் எடுக்காமல் வெளியேறினார்.
இதனால், கொல்கத்தா அணி 17 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. பின்னர், மோர்கன், ராகுல் திரிபாதி இருவரும் கூட்டணி சேர அணியின் எண்ணிக்கையை நிதானமாக உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி அரைசதம் அடிக்காமல் 41 ரன்னில் ரவி பிஷ்னோயிடம் கேட்சை கொடுத்தார்.
அடுத்து இறங்கிய ரஸ்ஸல் 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப இறுதியாக கொல்கத்தா அணி 16.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிரடியாக விளையாடி வந்த மோர்கன் கடைசிவரை களத்தில் 47* ரன்கள் எடுத்து நின்றார்.
பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணி தலா 6 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் 2 போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியை தழுவி இரு அணிகளும் 4 புள்ளிகளில் உள்ளது.